Chelvanayakam, Samuel James Velupillai
- https://viaf.org/viaf/113941416/#Chelvanayakam,_Samuel_James_Velupillai,_1898-1977
- Person
- 1898-1977
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மலேசியாவிலுள்ள ஈப்போ நகரில் 31 மார்ச் 1898 இல் வணிகரான விசுவநாதன் வேலுப்பிள்ளை அவர்களுக்கும் ஹரியட் அன்னம்மா கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே தனது தாயாருடனும் இரு சகோதரர்கள், ஒரு சகோதரியுடனும் கல்வி கற்கும் நோக்குடன் இலங்கையிலுள்ள தெல்லிப்பழைக்குத் திரும்பினார். செல்வநாயகம் தனது ஆரம்பகாலக் கல்வியினை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் எட்டு வருடங்கள் பயின்றார். பின்னர், பரி. யோவான் கல்லூரியில் ஐந்து வருடங்களும் கல்கிசையிலுள்ள புனித தோமையர் கல்லூரியிலும் கல்வி பயின்றார். 1918 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகப் பயின்று அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். 1927 ஆம் ஆண்டு எமிலி கிரேஸ் பார் குமாரகுலசிங்கத்தைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.
செல்வநாயகம் புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியராக சில காலம் பணிபுரிந்தார். 1919 ஆம் ஆண்டு உவெஸ்லிக் கல்லூரியில் கணித ஆசிரியராகச் சேர்ந்து, பின்னர் அக்கல்லூரியின் அறிவியல் துறைத் தலைவராகவும் பணிபுரிந்தார். உவெஸ்லிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி கற்று சட்ட அறிஞரானார். செல்வநாயகம் தனது சட்டத் தொழிலை கொழும்பு விண்ணப்ப நீதிமன்றத்தில் ஆரம்பித்தார். அங்கிருந்து மாவட்ட நீதிமன்றத்திலும் பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றங்களிலும் வழக்குரைஞராக விளங்கினார். 31 மே 1947 இல் இராணியின் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார்.
செல்வநாயகம் தனது வழக்குரைஞர் தொழிலை விடுத்து 1944 இல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முதன்மை ஒழுங்கமைப்பாளராக அரசியலில் இணைந்தார். 1947 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 18 டிசம்பர் 1949 இல் செல்வநாயகம் இலங்கை தமிழரசுக் கட்சியை ஈ. எம். வி. நாகநாதன் மற்றும் வி. நவரத்தினம் ஆகியோருடன் இணைந்து உருவாக்கினார். இது சமஷ்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது. ஈ. எம். வி. நாகநாதனும் வி. நவரத்தினமும் இணைச் செயலாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். செல்வநாயகம் தமிழ்ச் செய்தித்தாளான சுதந்திரனின் இயக்குனராகவும் விளங்கினார்.
தமிழ் மக்களின் அடையாளத்தையும் உரிமைகளையும் காப்பதற்கு உழைத்தமையால் செல்வநாயகம் தமிழ் மக்களால் தந்தை செல்வா என அழைக்கப்பட்டார்.
26 ஜூலை 1957 இல் பிரதமருடன் இணைந்து பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது தமிழ்மொழிக்கு சம உரிமை, தமிழ்ப் பாரம்பரிய நிலங்களில் குடியேற்றங்கள் ஒழிப்பு, தமிழ் மாகாணங்களுக்கு சுயாட்சி, மலையக மக்களுக்கு இலங்கைக் குடியுரிமை ஆகியவற்றை கோரி நின்றது (எஸ். ஜே. வி. செல்வநாயகமும் இலங்கை தமிழ்த் தேசியத்தின் நெருக்கடி நிலையும் / ஏ. ஜே. வில்சன்). 24 மார்ச் 1965 இல் செல்வநாயகம் 1958 இன் தமிழ்மொழி சிறப்பு உரிமைகள் சட்டம் எண். 28 என்னும் சட்டத்தைக் கவனப்படுத்திய சேனாநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். எனினும், இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
செல்வநாயகத்தின் உடல்நிலை பார்க்கின்சனின் நோய் காரணமாக மிலவும் நலிவடைந்திருந்தது. இதற்கான சத்திரசிகிச்சையை எடின்பர்க் நகரில் அவர் மேற்கொண்டார். மார்ச் 1977 இல் நிலத்தில் வீழ்ந்து ஏற்பட்ட தலைக்காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 26 ஏப்ரல் 1977 இல் இயற்கை எய்தினார்.